நமக்காக பேசும் ஆண்டவர்!
ஒரு பேச்சுப் போட்டிக்கு போகிறீர்கள். முக்கியமான குடும்ப விஷயம் தொடர்பாக ஆலோசிக்கப் போகிறீர்கள். இன்டர்வியூவுக்கு போகிறீர்கள்.இப்படிப்பட்ட நல்ல விஷயங்களுக்கு புறப்படும் முன்பாக என்ன பேசுவது, எப்படி நடந்து கொள்வது என்பதை புத்தகங்களைப் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அனுபவஸ்தர்களிடம் ஆலோசித்திருப்பீர்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக தேவன் இருக்கிறார். நாம் அவருடன் பேச வேண்டும். “ஆண்டவரே! நான் இன்று ஒரு நல்ல விஷயம் தொடர்பாக போகிறேன். என் வாழ்க்கை தலைவிதியை நிர்ணயிக்கும் நேர்முகத் தேர்வுக்கு செல்கிறேன். நிர்க்கதியாக கணவன் வீட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட என் சகோதரியின் வாழ்க்கை பிரச்னை குறித்து பேசி, பிரிந்தவர்களை இணைத்து வைக்கப் போகிறேன். நான் பேச்சுப் போட்டிக்கு செல்கிறேன். எனக்கு பேசும் வல்லமையையும், வெற்றியையும் தர வேண்டும்,” என ஜெபித்தாலே போதும். வல்லமையுள்ள தேவன் உங்கள் வாக்கில் இறங்கி விடுவார். பைபிளில், “எப்படி பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல; உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத்.10:19,20) என்ற வசனம் இருக்கிறது. இந்த வசனத்தின்படி தேவனே பேசுவார்; அவரே பதிலளிப்பார். தேவனின் பதில் சமாதானத்தையும், வெற்றியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.