அய்யம்பேட்டையில் அஸ்தலிங்க சித்தர்
அய்யம்பேட்டை: வேண்டுதல்களை நிறைவேற்றும் சித்தர்களில் ஒருவராக, அஸ்தலிங்க சித்தர், அய்யன்பேட்டை அருள்பாலித்து வருகிறார். இவருக்கு, ஆண்டுதோறும், வைகாசி மாதம் சுவாதி நட்சத்திர திருநாளில், இவரின் நட்சத்திர திருநாளாக கீழ் தெருவாசிகள் கொண்டாடி வருகின்றனர். திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்தலிங்க சித்தர். இவர், சில நுாற்றாண்டுகளுக்கு முன், அய்யன்பேட்டை கீழ் தெருவாசிகளின் மண்டபம் ஒன்றில் தங்கி இருந்தார். அப்போது, தான் அவதரித்த வைகாசி திங்கள் சுவாதி நட்சத்திர தினத்தன்று ஜீவ சமாதியடைய உள்ளதாக, அப்பகுதிவாசிகளிடம் சித்தர் கூறியதாவும்; அவர் கூறிய தேதியன்றே அவர் ஜீவ சமாதியடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நாளையே, கீழ் தெருவாசிகள் அஸ்தலிங்க சித்தரின் அவதார திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினத்தில், அன்னதானம் மற்றும் சிறப்பு அபிேஷகங்கள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
திருச்செங்கோடு பகுதியில் இருந்து, ஒரு சித்தர் அய்யன்பேட்டை கிராமத்தில் தங்கி இருந்தார். அவர் கூறிய தினத்தன்று கையில் சிவ லிங்கத்துடன் ஜீவ சமாதியானார். அவரின் நினைவாக, அதே லிங்கம் பிரதிஷ்டை செய்து, கிராமவாசிகள் வழிபட்டு வந்தனர். வைகாசி திங்கள் சுவாதி நட்சத்திர தினத்தன்று, குரு பூஜை நடைபெறுகிறது. இந்த சித்தரை வழிபடுவோருக்கு, எண்ணிய எண்ணங்கள் ஈடேறுகிறது என்ற நம்பிக்கை, கிராமவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எஸ்.தனமுத்து, அய்யம்பேட்டை