மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
பவானி: பவானி, காளிங்கராயன் பாளையத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. காளிங்கராயன் பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த டிச., 20ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை, 6:00 மணிக்கு தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம் மனுக்கு, பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. பழனிபுரத்திலுள்ள, பாலவிநாயகர், பட்டதரசியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. மதியம், 2:00 மணிக்கு பக்தர்கள் கூடுதுறையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். இரவு, 7:00 மணியளவில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடந்தது. நாளை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் விழா முடி வடைகிறது.
* ஈரோடு, பெரியவலசு மாணிக்கம்பாளையம் ரோடு, எம்.ஜி.ஆர் காலனியில் முத்து மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். கடந்த, 3ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 10 அன்று தீர்த்தம் எடுத்து கோவில் கரகம் கொண்டு வருதல் நடக்கிறது. 11 காலை பொங்கல் விழா, மாவிளக்கு, ஊர்வலம், 12 அன்று கம்பம் எடுத்து மஞ்சள் நீராடுதல், அம்மனுக்கு மலர் பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. 13 அன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.