தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை, 7:50 மணிக்கு விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர், மேள தாளம் முழங்க, தங்க கொடி மரம் முன் எழுந்தருளினர். இதையடுத்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, காலை, 8:10 மணிக்கு, சுவாமி சன்னிதி முன் உள்ள, 61 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். 10 நாட்களும், காலை, இரவு சுவாமி மாட வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். வரும், 14ல், திருவண்ணாமலை தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடக்க உள்ளது.