சபரிமலையில் தங்க அங்கி பெட்டி சுமந்த ஐயப்ப பக்தர் ராமையா!
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சபரிமலை ஐயப்பனை அலங்கரிக்கும் தங்க அங்கி பெட்டியை சுமந்து சென்றார். பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா,46. கடந்த 10 ஆண்டுகளாக அகில உலக சேவா அமைப்பு மூலம் சபரி மலைக்கு வரும் பக்தர்களுக்கு, அவசர சிகிச்சை பிரிவில் இணைந்து சேவை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி சபரிமலை தேவஸ்தானம் ஐயப்பனை அலங்கரிக்கும் தங்க அங்கி பெட்டியை சுமந்து செல்லும் பணியை கொடுத்தது. கடந்த 7 ஆண்டுகளாக திருநெல்வேலி நாகராஜ், புதுச்சேரி சுப்பிரமணியத்துடன் இணைந்து சுமந்து செல்கிறார். இந்த ஆண்டும் தங்க அங்கி பெட்டியை சுமக்கும் பணி வழங்கப்பட்டது. இம்முறை ஐயப்பனின் சந்நிதானத்தில் உள்ள 18 படிகளில் ஏறும் வாய்ப்பு கிடைத்தது. ராமையா கூறுகையில்,“ 18 படிகளிலும் தங்க அங்கி பெட்டியை சுமந்து சென்றதை என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.