புதிய தொழில் நுட்பத்தில் ஏழுமலையான் தரிசனம்
திருப்பதி : வி.ஆர்., எனப்படும், புதிய தொழில்நுட்பம் மூலம், ஏழுமலையானை, மூன்று நிமிடங்கள் தரிசித்த அனுபவத்தை பெறும் வசதி, ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் நடக்கும், இந்திய அறிவியல் மாநாட்டில், ஆந்திர அரசின் வேண்டுகோளின்படி, திருமலை ஏழுமலையானை மலையேறி சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்காக, புதிய தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வர்சுவல் ரியாலிட்டி எனப்படும், கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்பட்ட தோற்றத்தை உண்மையான தோற்றம் போல் காண்பிக்கும் தொழில்நுட்ப வசதி இது. பிரபல மென்பொருள் நிறுவனம், இதற்கான புதிய,ஆப்பை உருவாக்கியுள்ளது. திருமலை, அலிபிரி மலைபாதை, அந்த வழியில் உள்ள கோபுரங்கள், திருமலை நுழைவு வாயில், ஏழுமலையான் கோவில் முன்வாசல், உள்ளிட்ட இடங்கள், நான்கு கேமராக்கள் மூலம் படமெடுக்கப்பட்டு, அவை,ஆப் ஆக மாற்றப்பட்டுள்ளது. இதை, தங்கள் கண்களில் மாட்டிகொண்டு பார்ப்பவர்களுக்கு, மூன்று நிமிடங்களில் ஏழுமலையானை மலையேறி சென்று, தரிசனம் செய்த அனுபவம் ஏற்படுமென, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.