மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜன.10ல் ஆருத்ரா தரிசனம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரை தினமான ஜன.,10 இரவு முதல் ஜன.,11 அதிகாலை வரை ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலில் மட்டுமே பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய ஐந்து உற்சவர் திருமேனிகள் (பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிர சபை, சித்திரைசபை) தனித்தனியாக உள்ளன. கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகள் சுவாமி கோயில் ஆறு கால் பீடத்தில் எழுந்தருளியும், இதர நான்கு சபை சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் 100 கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து ஏக காலத்தில் இரு இடங்களிலும் அபிஷேக, ஆராதனை நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து ஜன.,11 காலை 7:00 மணிக்கு பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து சேத்தியாகும். பக்தர்கள், சேவார்த்திகள் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய், இதர அபிஷேகப் பொருட்களை ஜன., 10 மாலை முதல் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.