சொர்க்க வாசல் திறப்பு: வி.ஐ.பி., பாஸ் இல்லை
நாமக்கல்: நாமக்கல், ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்புக்கு, வி.ஐ.பி., பாஸ் இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ரங்கநாதர் கோவில் உள்ளது. மார்கழி மாதம், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு, வரும், 8 அதிகாலை, 4:00 - 4:30 மணிக்குள் சொர்க்க வாசல் திறக்கப்படவுள்ளது. இந்தாண்டு வி.ஐ.பி., பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகரிகள் கூறியதாவது: சொர்க்கவாசல் திறப்பின்போது, அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வி.ஐ.பி., பாஸ் வழங்குவது வழக்கம். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆண்டு, வி.ஐ.பி., பாஸ் வழங்குவது ரத்து செய்யப்படுகிறது. அனைவரும் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.