பெருமாள் கோவில்களில் ஜன 8, வைகுண்ட ஏகாதசி
 திருவள்ளூர்: நுாற்று எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர் வீரராகவர் கோவில் உட்பட அனைத்து வைணவ கோவில்களில், ஜன8, வைகுண்ட ஏகாதசி விழா, சிறப்பாக கொண்டாடப்படுகிறது; சொர்க்க வாசல் திறப்பும் நடக்கிறது.
ஏகாதசியை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஜன8, காலை, 4:00 மணிக்கு தனுர் மாத பூஜைக்கு பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் காலை, 5:00 மணிக்கு உள் புறப்பாடு நடைபெறும். வெள்ளிக்கிழமை மண்டபத்தில் எழுந்தருளும் பெருமாள், பக்தர்களுக்கு 
சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். மாலை, 6:00 மணிக்கு மாடவீதி புறப்பாடு நடைபெறும்.
திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு ஜன8, மாலை, 5:00 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பூங்காநகர் சிவ  விஷ்ணு கோவிலில்,  காலை, 11:00 மணிக்கு, 108 சங்காபிஷேக பூஜை ஹோமமும், மாலை, 4:30 மணிக்கு, 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெறும். அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இதுபோல், பெருமாள்பட்டு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள வைணவ கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.