நாமக்கல் மாவட்டத்தில் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் சொர்க்க வாசல் திறப்பு விழா
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நாமக்கல் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்ய பூஜையுடன் நடந்தது. பரமபத வாசல் வழியாக, பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். கோவில் படிவாசலில் இருந்து, பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலையும் தாண்டி உழவர் சந்தை வரை, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
* குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், கோவிந்தா, கோவிந்தா சரண கோஷத்துடன் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பல்வேறு கோவில்களில் இருந்து வருகை தந்த பஜனை குழுவினரை உபசரிக்கும் வைபவம் நடந்தது.
* மல்லசமுத்திரம் அழகுராயபெருமாள் கோவில் பிரச்னையால், உற்சவர் வீதிஉலா இன்றி, பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது. பதற்றம் நிலவியதால், தாசில்தார் தமிழ்மணி, டி.எஸ்.பி., சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர்.
* ராசிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமாலை தரிசனம் செய்து, தங்கப்பல்லியை வணங்கிவிட்டு, சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தனர்.
* காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணியளவில், சிறப்பு பூஜை மற்றும் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 5:30 மணிக்கு சுவாமி சொர்க்க வாசல் வழியாக வருதல் வைபவம் நடந்தது.
*பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறக்கபட்டது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.