உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: கொட்டும் பனியில் தரிசனம் செய்த பக்தர்கள்

சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: கொட்டும் பனியில் தரிசனம் செய்த பக்தர்கள்

சேலம்: சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதில், கொட்டும் பனியை பொருட்படுத்தாமல், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பையொட்டி, நேற்று நள்ளிரவு முதல், சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, பெருமாளுக்கு ரத்ன கிரீடம் சூட்டப்பட்டு, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. காலை, 5:10க்கு, கோவில் வடப்புறம் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அந்த வழியே, ஸ்ரீதேவி, பூமிதேவியுடன், பெருமாள் திருவீதி உலா வந்தார். அவரை தரிசிக்க, கொட்டும் பனியில் நள்ளிரவு முதல் காத்திருந்த பக்தர்கள், கோவிந்தா கோஷங்களை எழுப்பி, வணங்கினர். இதையொட்டி, மூலவர் அழகிரிநாதருக்கு, திருப்பதி ஏழுமலையான் அலங்காரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணுதுர்க்கை சுவாமிகளுக்கு, தங்கக்கவச சாத்துபடி செய்யப்பட்டது. கண்ணாடி மாளிகையில் சிறப்பு அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், வரிசையில் வந்து, சுவாமி தரிசனம் செய்து, பரமபத வாசல் வழியே வெளியே சென்றனர். தரிசனத்திற்காக, பழைய மாநகராட்சி அலுவலகம் வரையும், மற்றொரு புறம், குண்டுபோடும் தெருவின் இறுதி வரையும், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அப்போது, 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* அதேபோல், சின்னக்கடை வீதி வரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், பரிமளரங்கநாதர், அழகாபுரம் வெங்கடாஜலபதி, கோரிமேடு வெங்கடாஜலபதி உள்ளிட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமர், காருவள்ளி வெங்கட்ரமணர், பெத்தநாயக்கன்பாளையம் கொப்புக்கொண்ட பெருமாள், ஆத்தூர் வெங்கடேஸ்வரர், சங்ககிரி வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி விழா, கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !