திருவெம்பாவை பாடினால் நல்ல மனைவி அமைவார்
சென்னை: திருவெம்பாவை பாடினால், நல்ல மனைவி அமைவார்; வாழ்க்கை சந்தோஷமாக அமையும், என, ஆன்மிக சொற்பொழிவாளர், ஆரூர் சுந்தரராமன் கூறினார். சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், திருவெம்பாவை விழா, நேற்று நடந்தது. ஆன்மிக சொற்பொழிவாளர், ஆரூர் சுந்தரராமன், திருவெம்பாவை குறித்து பேசியதாவது:
திருவாசகம், ஈசனால் எழுதப்பட்ட நுால். திருவாசகம் முழுமைக்குமான பொருள், தில்லைக்கூத்தன் என, மாணிக்கவாசகர் கூறியுள்ளார். தேவர்களின் காலை பொழுதான மார்கழி மாதத்தில், அனைத்து சன்னிதிகள் முன்பும், திருவெம்பாவை பாடல்களே பாடப்படுகின்றன. திருவாசகம் கேட்போரை கசிந்து உருகச் செய்யும். திருவெம்பாவை பாடினால், நல்ல மனைவி கிட்டும்; வாழ்க்கை சந்தோஷமாக அமையும்; சுகம், மேன்மை கிடைக்கும். நீர் நிலைகளை, சிவசக்தியாக நினைத்து வணங்குங்கள்; மனது அமைதியாகும். மார்கழியில், அதிகாலை எழுந்து பழகினால், ஆண்டு முழுவதும், அதிகாலை எழுவது எளிதாகும்; உடம்புக்கும், மனசுக்கும் நிறைவாக இருக்கும்; நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். அன்றைய பணிகள் விரைவாக முடிக்க, மனதில் உந்துதல் கிடைக்கும். திட்டமிட்ட நேரத்தில் பணியை முடிக்கும் போது, மனதில் உற்சாகம் ஏற்படும். உதிரும் இலையை உரமாக்கி, மரம் உயர்கிறது. ஒவ்வொரு தோல்வியையும், உனக்கு உரமாக்கி உயர வேண்டும். அது தான் நம்பிக்கையின் மீது, நீ வைக்கும் நம்பிக்கை. கடவுள் மீது பூரண நம்பிக்கை வைக்கும் மனிதன், புலம்ப மாட்டான். நல்லதை விதைத்தால், நல்லது நடக்கும்; கெட்டதை விதைச்சால், கெட்டது தான் முளைக்கும் என, உணர்ந்து நடந்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும். இவ்வாறு சுந்தரராமன் பேசினார்.