பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்:கங்கை நீர் எடுத்து வர குழு பயணம்
பெரம்பலுார்:-கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக, கங்கை புனித நீர் எடுத்து வர, அதற்கான குழுவினர், உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷுக்கு புறப்பட்டு சென்றனர். அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள, பிரகதீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போராடி, வெற்றி பெற்றதன் சின்னமாக கட்டப்பட்டது. இக்கோவிலில், 1932ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது, 85 ஆண்டுகளுக்கு பின், வரும் பிப்., 2ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கான புனித கங்கை நீர் எடுத்து வருவதற்காக, உத்தரகண்ட் மாநிலம் தேவபிரயாகை அல்லது ரிஷிகேஷத்திற்கு, 20 பேர் அடங்கிய குழுவினர், நேற்று முன் தினம் புறப்பட்டு சென்றனர். ரிஷிகேஷத்தில், சங்கரமடம் மற்றும் தமிழ் நலச்சங்கத்தினர், இக்குழுவினை வரவேற்று, கங்கை நீரை அளிக்க உள்ளனர். தலா, 10 லிட்டர் கொள்ளளவு உள்ள, 108 குடங்களில் புனித நீர் எடுத்து வரப்படவுள்ளது. நீரை பெற்று, 13ல் தமிழகம் வரவுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருலோகி என்ற இடத்தில் புனித நீர் குடங்கள் வைக்கப்பட்டு, பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.