உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன், சந்தனக்காப்பு அலங்காரத்தில் நேற்று அருள் பாலித்தார். கோபி அருகே பிரசித்தி பெற்ற, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், குண்டம் மற்றும் தேர்த்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு நடக்கும் சந்தனக்காப்பு அலங்காரம், மிகவும் விசேஷமானது. மற்ற நாட்களில் அம்மனின், முக அழகை மட்டுமே கண்டு தரிசிக்க முடியும். ஆனால், சந்தனக்காப்பு அலங்காரத்தில், முழு உருவமும் சந்தனத்தால் அலங்கரிக்கப்படும். எனவே, இந்த அலங்காரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. விசேஷமிக்க சந்தனக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நோய் வராது, நலன்கள் சேரும் என்ற நம்பிக்கையால், அம்மனின் திருமேனியை அலங்கரித்த சந்தனத்தை, பக்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதையொட்டி, பாரியூர் அன்னதான குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா, 12ம் தேதி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பர். மறுநாள் (13ம் தேதி) தேரோட்டம், 14ல் முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா கோபி வந்தடைதல், தெப்போற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !