உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்யாகுமரியின் இசை ஆராதனை

கன்யாகுமரியின் இசை ஆராதனை

மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜத்தின் 65 வது ஆண்டு இசை விழா நடந்தது.நேற்று கன்யாகுமரி குழுவினரின் வயலின் இன்னிசை கச்சேரி நடந்தது. எல்.ராமகிருஷ்ணன் மற்றும் சாய் ரக் ஷீத் இணைந்து வயலின் இசைத்தனர். தொடக்கமாக ஆதிதாளத்தில் அமைந்த நாட்டக்குறிஞ்சி வர்ணம் சுநாதமாக இருக்க தொடர்ந்து வந்த வினாயகர் துதி அம்சத்தொனி ராகத்தில் விறுவிறுப்பாக கச்சேரியை களைகட்டச் செய்தது. தொடர்ந்து தியாகராஜர் சீத்தாதேவியை புகழ்ந்து பாடிய சிந்து கன்னட ராக கீர்த்தனை நன்னு கன்ன தல்லி என துவங்கும் பாடல் ஆதி தாளத்தில் இசை மணம் பரப்பியது. தொடர்ந்து கனராக பஞ்சரத்தின கீர்த்தனை ஜெகதாநந்த தாரக என துவங்கும் நாட்டை ராக பஞ்சரத்தினம் இசை ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தது.தொடர்ந்து மிகஅபூர்வமாக கச்சேரிகளில் வாசிக்கப்படும் முத்துசுவாமி தீட்சிதரின் 14 ராகங்களை கொண்ட ராகமாலிகா இசை விழாவில் பெரும் விருந்தாக அமைந்தது. அடுத்ததாக திருப்பதி எழுமலையானின் ஏழு மலைக்கும் ஒவ்வொரு புதிய ராகத்தை கண்டுபிடித்து கன்யாகுமரி வாசித்து வருகிறார். அதில் அன்னமாச்சாரியார் இயற்றிய நேருநேது என தொடங்கும் நாராயணயதி என்ற புதிய ராகபாடல் கச்சேரியில் தரம்உயர்த்தி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தவில் வாசித்த கே.சேகர் மற்றும் கஞ்சிரா வாசித்தஅனிருத் ஆத்ரேயா இருவரும் இணைந்து கன்னியாகுமரியின் இசைக்கு இணையாக தாளவேள்வியை நடத்தினர். அடுத்ததாக கச்சேரியை தியாகராஜர் ஆராதனையாக மாற்றிய நவரச கன்னட ராகத்தில் அமைந்த நின்னுவினா என்ற கீர்த்தனை பக்தியுடன் விளங்கியது. இன்று மாலை சஞ்சய் சுப்பிரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !