உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி: சட்டத்தை மீறுபவருக்கு காப்பு என பரபரப்பு!

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி: சட்டத்தை மீறுபவருக்கு காப்பு என பரபரப்பு!

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், இரும்பு சங்கிலி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டத்தை மீறுபவர்கள், கைதாவர் என்ற தகவல் பக்தர்கள் மத்தியில் பரவிவருகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த சிவன்மலை, சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக் கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. சிவன்மலை ஆண்டவர், பக்தரின் கனவில் சென்று உத்தரவிட, அந்த பக்தர் கோவிலுக்கு சென்று, பொருளை சொல்வார். கோவிலில் பூ வாக்கு கோட்டு உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, பெட்டியில் அந்தப் பொருள் வைக்கப்படும்.   இதில் வைத்து பூஜிக்கப்படும் பொருள் சமுதாயம் மற்றும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்டியில் மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு என, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து, இதுவரை பூஜை செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் இரும்பு சங்கிலி இடம் பெற்றுள்ளது.  

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கொங்கூரை சேர்ந்த சிவராம் என்பவரின் கனவில், இரும்பு சங்கிலி வைக்க உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல், இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த ஆக.,29 முதல் பூமாலை வைக்கப்பட்டிருந்தது.  சட்டத்தை மீறினால் காப்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் துப்பாக்கி இடம் பெற்றபோது, கார்கில் போர் ஏற்பட்டது. தண்ணீர் வைத்தபோது, சுனாமி வந்தது. கணக்கு நோட்டு புத்தகம் வைத்தபோது, மத்திய அரசாங்கம் கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது. தற்போது இரும்பு சங்கலி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என, பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒரே பக்தருக்கு ஐந்தாவது உத்தரவு: பெட்டியில் இதற்கு முன்னதாக இடம் பெற்ற பூமாலையும், சிவராம் கனவில் வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இரும்பு சங்கிலி இவர் மூலம் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, 2016 ஜன.,9-ல் அச்சு வெல்லம், 2015 ஜூலை, 27ல் உப்பு, 2014- டிச.,23ல் பால் வைக்கவும் இவர் கனவில்தான் ஆண்டவர் உத்தரவிட்டார். இந்த வகையில் சிவராம் மூலம், ஐந்து பொருட்கள், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !