திருப்பூர் ஆருத்ரா தரிசன விழாவில் திருக்கல்யாண உற்சவம்
திருப்பூர்: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நல்லூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா, கடந்த, 2ல், மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது. திருவாதிரை திருநாளான நேற்று, பெண்கள் விரதம் இருந்து, மாங்கல்ய நோன்பு கடைபிடித்தனர். நல்லூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, வேத மந்திரங்கள் முழங்க, அம்பாளுடன்
சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில்,ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மஞ்சள் சரடு உள்ளிட்ட திருமாங்கல்ய பொருட்கள் வழங்கப்பட்டன.
திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று காலை, பக்தர்களிடையே உள்ள ஆணவம், அகங்காரம், பாவங்களை, சுவாமி பிச்சையாக எடுத்து, ஞானம் வழங்கும் வகையில், பிச்சாண்டவர் ரூபத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். பக்தர்கள் சுவாமிக்கு அரிசி, மாலை, உணவு பொருள் வழங்கி வழிபட்டனர். மாலையில், திருக்கல்யாணம் நடந்தது.
அவிநாசிலிங்வேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று மாலை, திருவாதிரை அம்மன், கிளி வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய நோன்பு பூஜை நடந்தது. எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், நேற்று ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, சிவாலயங்களில் இன்று அதிகாலை, நடராஜர் பெருமானுக்கு, 32 திரவியங்களில், அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. பட்டி சுற்றுதல், திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.