உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா பவானீஸ்வரர் கோவிலில் அமர்க்களம்

ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா பவானீஸ்வரர் கோவிலில் அமர்க்களம்

ஊட்டி: ஊட்டியில், நுாற்றாண்டை கடந்த பவானீஸ்வரர் கோவில் விழா, நேற்று விமரிசையாக நடந்தது. ஊட்டி அருகே, எம். பாலடா செல்லும் சாலையில், தோடரின மக்கள் வசிக்கும் மந்தை (கிராமம்) ஒட்டி, பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை, தோடரின மக்கள் பராமரித்து, ஆண்டுதோறும் விழா எடுத்து வருகின்றனர். இங்கு, நதி உருவாவதால், பவானீஸ்வரர் கோவில் என, அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும், இக்கோவிலில் நடராஜ பெருமானின் ஆருத்ராதரிசன மகோற்சவ விழா, விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டின் ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. விழாவை முன்னிட்டு, தேர் ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், பவானீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேர் ஊர்வலம், பவானீஸ்வரர் கோவிலில் இருந்து துவங்கி, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள பாறை முனீஸ்வரர் கோவில், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை, வேணு கோபால்சாமி கோவில், மணிக்கூண்டு, லோயர் பஜார், சுப்பிரமணிய சுவாமி கோவில் வழியாக மீண்டும் பவானீஸ்வரர் கோவிலை சென்றடைந்தது.

ஆங்காங்கே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தோடரின மக்கள், தங்களின் பாரம்பரிய ஆடை அணிந்து, ஐந்துலாந்தர் சாலையில், நடனமாடி உற்சாகமாக விழாவில் பங்கேற்றனர். விழா குறித்து தோடர் இனத்தை சேர்ந்த சத்தியராஜ் கூறுகையில்,“நுாற்றாண்டு கடந்து, இவ்விழாவை நடத்தி வருகிறோம்; விழாவில், 15 மந்துகளில் வசிக்கும் தோடரின மக்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். இவ்விழாவின் மூலம், தோடரின மக்களின் பாரம்பரியம், கலாசாரத்தை பிற மக்கள் அறிந்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. எங்கள் கலாசாரத்தின் ஒரு பெருமையாக இவ்விழாவை கருதுகிறோம்,” என்றார். * கோவில் நிர்வாகி காந்தராஜ் கூறுகையில், “தமிழகத்தில் வேறு எங்குமில்லாத காட்சியாக, ஊட்டியின் கடுங்குளிரில் அதிகாலையில் ஊர்வலம் துவக்கி, 13 மணி நேர தேர்பவனி இங்கு நடத்தப்படுகிறது. இதிலும், ஆதிவாசி மக்களான தோடர் இன மக்கள் இந்த பவனியை பாரம்பரிய விழாவாக நடத்தி வருகின்றனர்,” என்றார். விழா ஏற்பாடுகளை நீலகிரி மலைவாழ் தோடர் இன மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !