பாரியூரில் இன்று குண்டம் திருவிழா: பூ மிதிக்க பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூ மிதிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் குண்டம் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பூ மிதிக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடக்கிறது. இதற்காக கோபி மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், கடந்த இரு நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர். பெண் பக்தர்களில், கோபி மேட்டுவளவு மல்லிகா முதலிடம், கீதா இரண்டாமிடம், நஞ்சகவுண்டம்பாளையம் சுசீலா மூன்றாம் இடத்தில் வரிசையில் அமர்ந்துள்ளனர். ஆண்கள் வரிசையில், கூகலூர் பெருமாள் முதலிடம், கோபி தங்கவேல் இரண்டாம் இடம் என, வரிசையில் காத்திருக்கின்றனர். குண்டம் அருகே, ஏழு டன்னில் எரிக்கரும்பு (ஊஞ்சமரக்கட்டைகள்) அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி குண்டம் பற்றவைத்து, விடியவிடிய கோவில் சேவகர்கள் மற்றும் மிராசுகள், பூ மிதிக்க ஏற்பாடுகள் செய்வர். அதிகாலை, 5:00 மணிக்கு மேல், பக்தர்கள் வரிசையாக பூ மிதிப்பர். ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் கண்காணிப்பில், இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள், ஆறு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் மொத்தம், 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் வளாகம் மற்றும் குண்டம் இறங்கும் இடம் என, மொத்தம், 18 இடங்களில், சி.சி.டி.வி., கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. வரிசையில் நிற்கும் பக்தர்கள், இரு பாலரும் நீராட வசதியாக, தனித்தனியாக ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது. குண்டத்து நெருப்பு மூட்டியதும், நீராட இணைப்பு வழங்கப்படவுள்ளது. மழையின்றி காய்ந்து கிடக்கும், தடப்பள்ளி வாய்க்காலில் நீராட முடியவில்லையே என, பெண் பக்தர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சிவகிரி சாவுத்திரி: கடந்த, 23 ஆண்டுகளாக பூ மிதிக்கிறேன். வாய்க்காலில் ஓடும் தண்ணீரில், குளித்து குண்டம் மிதிப்பது வழக்கம். வாய்க்கால் அருகே விஷேத்துக்காக குறைந்தளவாவது தண்ணீர் திறந்திருக்கலாம். திருப்பூர் கோகிலா: கடந்த, 25 ஆண்டுகளாக பூ மிதிக்கிறேன். ஷவர் பாத் எல்லாம் பெண்களுக்கு ஒத்துவராது. கூட்ட நெரிசலில், தள்ளு முள்ளு ஏற்பட்டு சண்டை வரும். எனவே, குண்டம் விழாவை முன்னிட்டு, குறைந்தளவு தண்ணீர் திறந்து இருக்கலாம்.