உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரத்தில் களைகட்டியது காணும் பொங்கல்

மாமல்லபுரத்தில் களைகட்டியது காணும் பொங்கல்

மாமல்லபுரம்: காணும் பொங்கல் சுற்றுலாவிற்காக, மாமல்லபுரத்தில் பயணிகள் குவிந்ததால், உற்சாகம் கரைபுரண்டது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர், காணும் பொங்கல் சுற்றுலாவிற்காக, நேற்று மாமல்லபுரத்தில் குவிந்தனர். அரசு பேருந்துகள், சுற்றுலா வாகனங்களில், காலை, 11:00 மணி முதல், பயணிகள் வர துவங்கி, படிப்படியாக கூட்டம் அதிகரித்தது. சுற்றுலா வாகனங்கள், பக்கிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை பகுதிக்கு அனுப்பப்பட்டு, அங்கு மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்பட்டன.அரசு பேருந்துகள், புறவழிச்சாலை சந்திப்பிலிருந்தே இயங்கி, அவற்றில் வந்த பயணிகள், அங்கேயே இறக்கி, ஏற்றப்பட்டனர். அவர்கள், அங்கிருந்து, பேருந்து நிலையம் செல்ல, மாநகர் சிற்றுந்துகள், தலா ஐந்து ரூபாய் கட்டணத்தில் இயக்கப்பட்டன.குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள் என, குவிந்த பயணிகள், கலைச்சின்னங்களில் அலை மோதினர். சிற்பங்களை கண்டுகளித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மரத்தடி, பாறைக்குன்று என, கூடி அமர்ந்து உண்டனர். தின்பண்டம் சுவைத்தனர். கடற்கரையில் தழுவிய அலைகளில் நீராடி, நொறுக்குத்தீனி தின்று, மணல்வெளியில் விளையாடி மகிழ்ந்தனர். கைவினைப்பொருட்கள், உணவகங்கள், தேநீர், குளிர்பானம் உள்ளிட்ட கடைகளில், வியாபாரம் களையாட்டியது.சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, நேரப்பதிவாளர் வளாகங்கள் இயங்கின. பயணிகளுக்கு, அரசு குடிநீர் விற்கப்பட்டது. முதலைப்பண்ணை, கோவளம், கடலோர தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகிய இடங்களிலும் பயணிகள் குவிந்தனர். போலீசார், பயணிகளின் பாதுகாப்பிற்கும், போக்குவரத்தை முறைப்படுத்தவும், கண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !