உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெகதளாவில் ஹெத்தை பண்டிகை நிறைவு

ஜெகதளாவில் ஹெத்தை பண்டிகை நிறைவு

ஊட்டி: குன்னுார் அருவங்காடு அருகே உள்ள, ஜெகதளாவில், ஹெத்தை பண்டிகை நிறைவு பெற்றது. நீலகிரியில், வாழும் படுகர் இன மக்கள், ஹெத்தையம்மன் பண்டிகையை, ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடி வருகின்றனர். இதில், பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, குந்தா, சின்னகுன்னூர், எப்பநாடு, கேத்தி, பந்துமை, உயிலட்டி, நெடுகுளா, பெப்பேன், கூக்கல் ஆகிய, 14 கிராமங்களில் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக நடந்து வந்தது. இதில், ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய, 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்களில், ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர். கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர்.

தொடர்ந்து, காரக்கொரை மடிமனையில் நடந்த பூகுண்டம் திருவிழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், ஜெகதளாவில் நேற்று நடந்த நிறைவு நாள் விழா, எளிமையாக கொண்டாடப்பட்டது. ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இப்பண்டிகை நடப்பாண்டு எளிமையாக நடத்தப்பட்டது இது குறித்து, கிராம மக்கள் கூறுகையில், வறட்சி மாவட்டமாக, நீலகிரி அறிவிக்கப்படாத நிலையில், தண்ணீர் இல்லை; பண பிரச்னை ஆகிய காரணங்களால் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது என்றார். இதனால், குறைவான அளவிலான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !