கோயிலில் சமூகவிரோத செயல்: அறநிலையத்துறை அலட்சியம்
திருமங்கலம்: இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியத்தால் திருமங்கலம் தாளமுத்தையா கோயில் மதுபாராக மாறி உள்ளது. திருமங்கலம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் உள்ளது தாளமுத்தையா கோயில். இங்கு செங்குளம், மாம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பராமரிப்பில் இருந்த வரை இக்கோயில் மிகவும் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. பூஜை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை இருந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டதால், அதனையே காரணம் காட்டி இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் நல்ல முறையில் வளர்ச்சி பெறும், இன்னும் அதிக கிராமங்களை சேர்ந்த கூடுதல் பக்தர்கள் வழிபட வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அந்த நம்பிக்கை சில மாதங்களிலேயே பொய்த்து போனது.
கோயிலை முறையாக பராமரிக்காமல் அறநிலையத்துறை அப்படியே போட்டு விட்டது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திய குடிமகன்கள் கோயில் வளாகத்தை மதுபாராக மாற்றி விட்டனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் தினமும் ஏராளமானோர் இங்கு மது அருந்துவதால் இங்கு வரும் பக்தர்கள் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் சிறப்பு வாய்ந்த தாளமுத்தையா கோயில், களையிழந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சிகள் கொண்டு கோயிலை பராமரிக்க வேண்டும்.