திருவண்ணாமலை கோவிலில் ரூ.3 கோடியில் பிரம்மாண்ட யாகசாலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவுக்காக, 3.25 கோடி ரூபாய் மதிப்பில், 108 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2002ல் நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திட, 27 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. வரும் பிப்.,6ல் மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்நிலையில், கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் நாட்டுகோட்டை நகரத்தார்கள் உபயமாக, 3.25 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட முறையில், 108 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 1,008 கலசம் வைத்து சிறப்பு பூஜை செய்து, புனித கலச நீரால், ஒன்பது கோபுரங்கள், அருணாசலேஸ்வரர் மூலவர் விமானம், உண்ணாமுலையம்மன் மூலவர் விமானம் உட்பட அனைத்து சன்னிதிகளிலும் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளன. 500க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக பணியில் ஈடுபட உள்ளனர். இது போன்று, ஏழு கோடியே, 19 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கலெக்டர் மற்றும் எஸ்.பி., நேற்று ஆய்வு நடத்தினர்.