ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம்: தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய பின், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், அக்னி தீர்த்த கடலில், தை, மாசி, ஆடி அமாவாசை நாட்களில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். நேற்று, தை அமாவாசை என்பதால், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில், புனித நீராடிய பின், கடற்கரையில் அமர்ந்து, புரோகிதர்களை வைத்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி பூஜை செய்தனர். தொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் சென்று சுவாமி, அம்மனை தரிசித்தனர். தை அமாவாசை என்பதால், ராமநாதசுவாமி கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தீர்த்தவாரிக்காக பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து, வேதமந்திரங்க சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை, தீர்த்தவாரி நடந்தது.