உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொலிவிழந்து வரும் மாரியூர் கடற்கரை: பக்தர்கள் வேதனை

பொலிவிழந்து வரும் மாரியூர் கடற்கரை: பக்தர்கள் வேதனை

சாயல்குடி: சாயல்குடி அருகில் உள்ள மாரியூர் கடற்கரை பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கி பொலிவிழந்து வருவது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. மான் உருவில் வந்த ராவணனின் மாமன் மாரீசன், சீதையுடன் விளையாட்டு காட்டவே கோபமுற்ற ராமன் அதனை வதம் செய்தார். மாரீசன் வதம் செய்யப்பட்ட இடம் என்பதால் அப்பகுதி மாரியூரானது.  இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க மாரியூர் கடற்கரை சவுக்கு மரங்கள் நிறைந்த மணற்பாங்கான எழில்மிகு கடற்கரையாக உள்ளது. ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பித்ருதோஷம் நீங்குவதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாத்ரிகர்கள் இங்குவந்து புனிதநீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி பூஜை செய்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கடற்கரையையொட்டி உடைமாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளது. மண் அரிப்பை தடுப்பதற்காக வனத்துறை சார்பில் சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளது.  இருந்தும் பராமரிப்பு இல்லாததால் கடற்கரையில் புற்கள், குப்பைகள், துணிகள் தேங்கி சுகாதாரகேடு நிலவுகிறது. உடைமாற்றும் அறைகளில் உள்ள கதவுகள் திருடப்பட்டு திறந்தவெளியாக உள்ளது.  போதிய கழிப்பறை வசதி இல்லாததால் கடற்கரை பகுதியை பக்தர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர்.  வரலாற்று சிறப்புமிக்க கடற்கரை பகுதி பொலிவிழந்து வருவது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் மாரியூர் கடற்கரை பகுதியை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !