வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஏழுநிலை ராஜகோபுரம் பூமி பூஜை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், 3.40 கோடி ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட, பூமி பூஜை நடந்தது. கோவை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ராஜகோபுரம் கட்டும்படி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 3.40 கோடி ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜ கோபுரம் கட்ட, அரசு அனுமதி வழங்கியது. இதற்கான கட்டுமான பூமி பூஜை கோவிலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில் உதவி கமிஷனர் ராமு வரவேற்றார். இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல ஸ்தபதி ராமகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூசாரி பரமேஸ்வரன் சிறப்பு பூஜைகள் செய்தார். எம்.பி., செல்வராஜ், எம்.எல்.ஏ., சின்னராஜ், ஸ்தபதி பாலசுப்பிரமணியன் ஆகியோர் பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். இந்த ராஜகோபுரத்தை மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.