பூஜை முறைகளில் உள்ள வேறுபாடு பூசாரிகளுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி
கோவை: இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், பணி புரியும் கிராமக்கோவில் பூசாரிகளுக்கு, கோவையில் துவங்கிய நான்கு நாட்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது. கோவை சுக்கிரவார் பேட்டையிலுள்ள, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கிராமக்கோவில் பூசாரிகளுக்கான, திறன் மேம்பாட்டுப் பயிற்சியை, கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, ஜன., 24ம் தேதி, துவக்கி வைத்தார்; உதவி கமிஷனர்கள் ஆனந்த், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் பட்டீசுவரர் கோவில் சர்வசாதகர் சிவாச்சல சுந்தரகுருக்கள், சிவாச்சாரியர்களுக்கான, சிவவழிபாடு, அதன் தொன்மை, சிவனின் தன்மை, ஆகம விதிகள், அதன் நடைமுறை, வழக்கமாக மேற்கொள்ளும் பூஜை முறைகள், அவற்றை மேற்கொள்ளும் விதம். அர்த்தயாமம், ராக்காலம். உச்சிகாலம், உதயம், அஸ்தமனம் ஆகிய பூஜை முறைகளுக்குள் உள்ள வேறுபாடுகளையும் அவற்றை நடத்துவது குறித்தும், பிரதோஷம், சிவராத்திரி, கும்பாபிஷேகம், வேள்வி, யாகம், கும்பஸ்தாபனம் ஆகியவை குறித்து கற்றுக்கொடுத்து விளக்கமளித்தார்.கிராமக்கோவில் பூசாரிகள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். சைவ சித்தாந்தம் குறித்த பயிற்சியும், அம்மன் கோவில் பூசாரிகளுக்கான பூஜை நடைமுறைகள் குறித்தும், பெருமாள் கோவில் பூசாரிகளுக்கான பூஜை நடைமுறை குறித்த பயிற்சியும் நடந்தது. இறுதி நாளான நேற்று முருகன் கோவில் பூசாரிகளுக்கு பல விதமான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற கோவை மண்டலத்திலுள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமக்கோவில் பூசாரிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர்கள் விமலா, முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.