திருமூர்த்திமலையில் தை அமாவாசை விழா
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், தை அமாவாசையையொட்டி, நடந்த சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அமராவதி, பாலாறு உட்பட ஆற்றங்கரைகளில், முன்னோர்களுக்கு திதி அளித்து வழிபாடுகளும் நடத்தப்பட்டன. உடுமலை திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தை அமாவாசையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த மும்மூர்த்திகளை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் அருகே பாலாற்றங்கரையில், முன்னோர்களுக்கு திதி அளித்து, மக்கள் வழிபாடு நடத்தினர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஞ்சலிங்க அருவியில், சீரான நீர் வரத்து இருந்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், தை அமாவாசையையொட்டி, உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், வெனசப்பட்டி கருப்பராயன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன.