உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான சிவன் கோவில் எதிரில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

பழமையான சிவன் கோவில் எதிரில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

மரக்காணம் : சிவன் கோவில் எதிரில், பழமையான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள காளியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம், 70; இவர், கடந்த மாதம், கூனிமேடு கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த, சிவன் கோவிலை புனரமைப்பதற்காக, கோவில் மீது இருந்த அரச மரத்தை அகற்ற முயன்றார். இதுகுறித்து, கிராம மக்கள் சிலர், மரக்காணம் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கோவில் சீரமைப்பு பணியை நிறுத்தும்படி, சண்முகத்திடம், போலீசார் கூறினர். பின், பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சண்முகம், நேற்று காலை 9:00 மணிக்கு, பொக்லைன் மூலமாக, சிவன் கோவில் எதிரில், 8 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது, ஒன்றரை அடி உயர சிவன்-பார்வதி சிலை, இரண்டு அடி உயர மீனாட்சி சிலை, ஒன்றரை அடி உயர வினாயகர் சிலை மற்றும் சூரனாயக்கர் என்ற பெயர் எழுதிய தாழி உள்ளிட்டவை மண்ணுக்குள் புதைந்திருந்தது. தகவலறிந்த, மரக்காணம் தாசில் தார் பாலசந்தர், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பள்ளத்தில் கண்டெடுத்த ஐம்பொன் சிலைகள் மற்றும் பழமையான தாழியை, வருவாய்த் துறையினர் பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !