கங்கையம்மனுக்கு கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
திருத்தணி: புதிதாக கட்டிய கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம், பிப்.,3ல் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.
திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தில், 6 லட்சம் ரூபாய் செலவில், கங்கையம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, பிப்.,2 கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில் இரண்டு யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, முதல்கால பூஜைகள் நடந்தன. பிப்.,3 காலை, 7:30 மணிக்கு, யாகசாலை பூஜைகள் மற்றும் கலச ஊர்வலம் நடந்தது. காலை, 9;00 மணிக்கு, புதிதாக அமைக்கப்பட்ட மூலவர் அம்மன் சிலைக்கும், விமானத்திற்கும் கலசநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
விழாவில், திருத்தணி, மாமண்டூர், அருங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு, உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.