இந்த ஆண்டு தீபாவளியன்றே கந்தசஷ்டி துவக்கம்!
மதுரை:வழக்கமாக, தீபாவளிக்கு மறுநாள் துவங்கும் கந்தசஷ்டிவிரதம், இந்த ஆண்டு தீபாவளியன்றே (அக்., 26) தொடங்குகிறது. ஐப்பசி பிரதமைதிதி தொடங்கி சஷ்டி வரை முருகன் கோயில்களில் பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்வர். தீபாவளியன்று அமாவாசையும், மறுநாள் பிரதமையும் துவங்கும். இதன்படி அக்.,27ல் துவங்கி நவ.,1ல் தான் சூரசம்ஹாரம் நடந்திருக்க வேண்டும். ஆனால், இவ்வாண்டு நவ.,1ல் சஷ்டி திதி மாலை 4 மணிக்கே முடிந்து விடுவதால், சஷ்டி திதி வேளையில் சூரசம்ஹாரத்தை நடத்த இயலாத நிலை உள்ளது. எனவே, அக்., 31 மாலை 4.58 மணிக்கு சஷ்டி திதி துவங்கியதும் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது. ஆறு நாட்கள் முன்னதாக விரதம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அக்., 26ல் விரதம் துவங்கி விடுகிறது. இந்நாளில் திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்கள், வீடுகளில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குகின்றனர்.