திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
திருப்பூர் :திருப்பூர், ஜெ.பி., நகர், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.கூத்தம்பாளையம் பிரிவு, ஜெ.பி.,நகரில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு, பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இது நிறைவடைந்ததை அடுத்து, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த, 7ம் தேதி, திருமுருகன்பூண்டி ஏனாதி நாயனார் மடாலயம் முத்து சுப்ரமணிய சிவாச்சார்யார் தலைமையில், யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், மகா அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.