ஓம் சக்தி கோஷம் முழங்க மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ஊட்டி :ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, திரண்டிருந்த பக்தர்களின் கூட்டத்தில், 15 ஆண்டு இடைவெளிக்கு பின், ஊட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஊட்டி மாரியம்மன் கோவில், 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. மாரியம்மன், காளியம்மன், காட்டேரியம்மன் என, முப்பெரும் தேவியராக எழுந்தருளியுள்ள ஆதி பராசக்தி, பக்தர்களுக்கு அருள் பாலித்து, விருப்பம், ஆசை (இச்சா) செயலாற்றல் (கிரியா) மற்றும் ஞானத்தை வழங்கி வருகிறார். ஒரே பீடமான நீலாம்பிகை பீடத்தில், மாரியம்மன், காளியம்மன் ஆகியோர் வீற்றிருப்பது, தனிச் சிறப்பு.
திருக்குட நன்னீராடல் : கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த, 1985ல், திருக்குட நன்னீராடலுக்கு பின், 1987ல், புதிய ராஜ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு, திருக்குட நன்னீராடல் நடத்தப்பட்டது. 1994ல், துர்க்கையம்மன் மற்றும் நவக்கிரக நாயகியர் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். கடந்த, 1995 ஜுன் 2ல், குட முழுக்கும், 2002, மார்ச் 10ல், மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
தீர்ந்தது ஏக்கம்: 12 ஆண்டுக்கு பின், கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஏக்கம், கடந்த மூன்றாண்டாக பக்தர்களின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு பின், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த, இரு மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. நேற்று, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த, 7ம் தேதி, விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜை, பூர்வாங்க பூஜைகள், தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தன. நேற்று முன்தினம், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, யந்திர ஸ்தாபனம், அஸ்டபந்தன மருந்து சார்த்தல் ஆகியவை நடந்தன.
விழா நாளான நேற்று, அதிகாலை, 5:55 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி ஆகியவை நடந்தன. காலை, 9:52 மணிக்கு, மூன்று விமான கோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நீலகிரி கலெக்டர் சங்கர், எஸ்.பி., முரளி ரம்பா, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின், பரிவார்த்த மூர்த்திகளாக வீற்றிருக்கும் பிள்ளையார், ஏகாம்பரேசுவரர், காமாட்சியம்மன், தியாகராஜ பெருமான், வடிவாம்பிகை, சுப்ரமணியர், சண்டேஸ்வரர், சப்த கன்னிமார்கள், சனீஸ்வரர், கருப்பண்ணசாமி, பைரவர், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தம்பதி சமேதராக வீற்றிருக்கும் நவகிரக நாயகர்களுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் உற்சாகம்: ஓம் சக்தி, பரா சக்தி, ஓம் காளி கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். பின், மாரியம்மனுக்கு குட முழுக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, அம்மன் திருவீதி உலா நடந்தது.கும்பாபிஷேகம் முடிந்ததும், பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்க ஸ்பிரிங்ளர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பி1 ஸ்டேஷன் வரை பேரிகாட் வைக்கப்பட்டு, மாற்றுப் பாதையில், வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.