கோட்டை ஈஸ்வரன் கோவில் தேர்த் திருவிழா
கோவை :ஆயிரம் ஆண்டு பழமையான, கோட்டை ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா, பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்றது. தேர் நகர வீதிகளில் ஆடி அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.கோவை நகரின் மையப்பகுதியான, டவுன்ஹால், கோட்டை மேடில், சங்கமேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு சங்கமேஸ்வரர் பிரதான கடவுளாக இருந்தாலும், ஆறுமுகங்களை கொண்ட, சுப்ரமணிய சுவாமிக்கே ஆண்டுதோறும் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருநாளில் தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.கோட்டை சங்கமேஸ்வர சுவாமி கோவிலில், பிப்., 7ம் தேதி வாஸ்து சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியோடு தைப்பூசத் திருவிழா துவங்கியது. 8ம் தேதி, கொடியேற்று விழா, சிவாச்சாரியார்கள் முன்னிலையில் நடந்தது. அன்று சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார்.
பிப்., 9ல், காலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, சுவாமி வள்ளி தெய்வானை சமேதராக வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வந்தனர். நேற்று காலை தைப்பூசத்தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேதராக, சுப்ரமணியசுவாமி, எழுந்தருளுவிக்கப்பட்டார்.பேரூராதீனம் இளையபட்டம், மருதாசலஅடிகள், வடம் பிடித்து தேரை இழுத்தார். தொடர்ந்து பக்தர்கள் இழுக்க, தேர் கோட்டை ஈஸ்வரன் கோவில், கோட்டை பெருமாள்கோவில் வீதி வழியாக, என்.எச்.சாலையை கடந்து, பெரியகடைவீதியை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. தேர் வலம் வந்த பாதைகளில், போலீசார் தீவிர கண்காணிப்புப்பணி மேற்கொண்டனர். தேரோட்டம் நடைபெற்ற பாதையில், 24 இடங்களில், சுழலும் கேமராக்கள் நிறுவப்பட்டு போலீசார் கண்காணித்தனர்.தாரை தப்பட்டை, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஏராளமானோர் தேர்த்திருவிழாவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும், இனிப்புகளும், குளிர்பானங்களும், நீர்மோரும் வழங்கப்பட்டன. அதேபோல், சுக்கிரவார் பேட்டை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நடைபெற்ற தேர்த்திருவிழாவில், காலை 4:30 மணிக்கு, சுவாமிக்கு மகாஅபிஷேகம், காலை 5:30 மணிக்கு, யாகசாலை பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தன.
காலை 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி எழுந்தருளுவிக்கப்பட்டார், சிவாச்சாரியார் மற்றும் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க, கோவிலிலிருந்து புறப்பட்ட தேர், தெலுங்கு பிராமனாள் வீதி வழியாக, சலிவன் வீதி, காந்திபார்க் ரவுண்டான வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. முருகனுக்கு அரோகரா என்று பக்தர்கள் கோஷம் எழுப்பினர் சிறப்பு அன்னதானம் கோவிலில் வழங்கப்பட்டது. கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பருதி, உதவி கமிஷனர்கள் ஆனந்த், கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.