ஆழ்வார்கள் பெருமையை உணர்த்துவது ராமாயணம்!
கோவை : ஆழ்வார்கள், அடியார்களின் வாழ்க்கை நடைமுறைகளை எடுத்துரைத்து, அவர்களின் பெருமையை உணர்த்துவது கம்பராமாயணம், என, நெல்லை கம்பன் கழக தலைவர் சடகோபன் பேசினார். கோவை கம்பன் கழகத்தின், 45ம் ஆண்டு கம்பன் விழா, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப்பள்ளி, நானி கலையரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், கம்பரின் சிறப்புகள் மற்றும் காப்பியத்தின் இலக்கிய நுட்பங்கள் விளக்கப்பட்டன. நேற்று, யுத்தகாண்டத்தில் யாருடைய சந்திப்பு கற்போர் நெஞ்சில் நிறைந்து நிற்கிறது எனும் தலைப்பில், சுழலும் சொல்லரங்கம் நடந்தது. கம்பன் பார்வையில்- ஆழ்வார்களும், அடியார்களும் எனும் தலைப்பில், நெல்லை கம்பன் கழக தலைவர் சடகோபன் தலைமை வகித்து பேசுகையில், கம்பராமாயண காவியம், உலக காப்பியங்களில் சிறந்தது. இதில், கம்பர் ஆழ்வார்கள், அடியார்களின் வாழ்க்கை நடைமுறைகளை எடுத்துரைத்து, அவர்களின் பெருமையை உணர்த்தியிருக்கிறார், என்றார். இதில், கம்பன் கழக உறுப்பினர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.