மாரியம்மன் கோவில் மண்டபம் கட்டாததால் பக்தர்கள் வேதனை
கரூர்: கரூர் நகரின் மத்தியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு, மண்டபம் அமைக்கும் பணிகள், கடந்த, ஆறாண்டுக்கு முன் துவக்கப்பட்டது. சாலையின் இரண்டு பக்கமும், 12 தூண்கள் அமைக்கப்பட்டும், மண்டப பணிகள் முழுமை பெறாமல், பாதியில் நிற்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, மாரியம்மன் கோவில் அறங்காவலர் முத்துக்குமார் கூறியதாவது: மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக, மண்டபம் அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, கடந்த, ஆறாண்டுக்கு முன் மாரியம்மன் கோவில் முன் இரண்டு பக்கமும், 12 தூண்கள் அமைக்கப்பட்டன. தற்போது, சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில், அவர்களே பணியை மேற்கொள்ள உள்ளதால், பணிகள் அப்படியே நிற்கிறது. விரைவில் பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான கட்டுமான மதிப்பீடுகளை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.