கிணத்துக்கடவு கோவில்களில் சிவராத்திரி விழா
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்று முன்தினம் சிவராத்திரி மற்றும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின், உற்சவ மூர்த்தி நந்தி வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலகண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவராத்திரியை ஒட்டி சிவலோகநாதர், சிவலோகநாயகிக்கும் ஆறுகால பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின், கும்மி பாடல்கள் பாடப்பட்டதால், பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
பிரம்மகிரி அய்யாசாமி கோவில்: கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், சிவராத்திரி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை ஒட்டி திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு சிவன் ராத்திரி திரு விழாவில், கடந்த 20ம் தேதி காலை, 9:00 மணியளிவில் கணபதி பூஜையுடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி காலை, 7:00 மணிக்கு பால் பூஜை, அலங்கார பூஜையை தொடர்ந்து, காலை, 8.00 மணியளவில் செண்டாமரம் கொண்டு வந்து ஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.00 மணிக்கு பால் பூஜையும், அலங்கார பூஜை நடந்தது. இரவு, 9: 00 மணிக்கு மாமாங்கம் ஆற்றுக்கு புறப்பட்டு சென்று, இரவு, 11:00 மணிக்கு ஆற்றில் இருந்து சக்திவேல், சக்தி கரகத்தோடு சுவாமி திருவீதி உலாவுடன் கோவில் வந்து சேர்ந்தது. மாலை, 6:00 மணியளவில், பிளேக் மாரியம்மன் கோவில் திடலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின், நேற்றுமுன்தினம் மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பூசாரி, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து சங்கத்தினர் செய்தனர்.
அர்ச்சுனேஸ்வரர் கோவில்: வரலாற்று சிறப்பு மிக்க கடத்துார் கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேசுவரர் கோவிலில், ஆண்டு தோறும் சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த 24ம் தேதி மாலை, 6:00 மணிக்கு யாகவேள்வியுடன் விழா தொடங்கியது. முதல்கால பூஜை இரவு, 6:00 முதல் 9:00 மணி வரையும், இரண்டாம் காலபூஜை, 9:00 முதல் 12:00 மணிவரையிலும், மூன்றாம் கால பூஜை, 12:00 முதல் அதிகாலை, 3:00 மணிவரையும், நான்காம் கால பூஜை, அதிகாலை, 3:00 முதல் 6:00 மணிவரையும் நடந்தது. அபிேஷகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.