மழை வேண்டி வயல்வெளியில் தொழுகை
வத்திராயிருப்பு:கடந்த ஒரு ஆண்டாக வத்திராயிருப்பு பகுதியில் மழை இல்லை. மற்ற பகுதிகளில் அவ்வப்போது பெய்த சாரல் மழைகூட இப்பகுதியில் இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது. முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள கூமாப்பட்டி, நெடுங்குளம், கொடிக்குளம், ரஹ்மத்நகர், கிழவன்கோயில் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். ஏற்கனவே மழையை நம்பி விதைத்த விவசாயிகள் பெரும் இழப்புகளுக்குள்ளாகினர். கூமாப்பட்டியில் விவசாயத்தில் பெரும் தேக்கநிலை உள்ளது. இங்கு வசிக்கும் ஏராளமான முஸ்லிம்களும் முற்றிலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். மழை வேண்டி ஏற்கனவே இப்பகுதி முஸ்லிம்கள் பலமுறை தொழுகை நடத்தினர். இந்நிலையில் நேற்று கூமாப்பட்டி முஸ்லிம் ஜமாத், நுாருல்லா ஈமான் கல்வி அறக்கட்டளை சார்பில் பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் வயல்வெளியில் இறங்கி 2 மணி நேரத்திற்கும் மேல் சிறப்பு பிரார்த்தனை, தொழுகையும் நடத்தினர். அறக்கட்டளை நிறுவனர் முகமது பிலால் தலைமை வகித்தார். கூமாப்பட்டி முஸ்லிம் ஜமாத் இமாம் சம்சுதீன், நுாருல்லா பைஜி ஆகியோர் தொழுகையை முன்னின்று நடத்தினர்.