பங்குனி பொங்கல் விழா தீச்சட்டி விற்பனை மும்முரம்
மானாமதுரை: தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் மாசி,பங்குனியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும். தாயமங்கலம், விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி, காரைக்குடி, பரமக்குடி, திருச்சுழி, உள்பட பல ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் விழாவின் போது பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரங்கண்பானை, உருவபொம்மைகள், எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவர். மானாமதுரையில் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்ணால் ஆன பொருட்களை தயார் செய்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர். தற்போது மாசி, பங்குனி பொங்கல் விழா வருவதையொட்டி, தீச்சட்டி, ஆயிரங்கண்பானை, உருவபொம்மைகளை தயார் செய்து வருகின்றனர். தீச்சட்டிகளில் மூன்று பக்க அம்மன் முகங்கள், 5 பக்க அம்மன் முகங்கள் கொண்ட தீச்சட்டி தயார் செய்து அவற்றிற்கு வண்ணம் தீட்டி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தீச்சட்டி தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது: அம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும்.பக்தர்கள் விரதமிருந்து தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.தெய்வ காரியம் என்பதால் தீச்சட்டி தயாரிக்கும் போது நாங்களும் விரதமிருந்து தீச்சட்டி, ஆயிரங்கண்பானை, உருவ பொம்மைகள் ஆகியவற்றை தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். தீச்சட்டி ரூ.50 லிருந்து ரூ.120 வரை,ஆயிரங்கண் பானை ரூ.50க்கும், உருவபொம்மைகள் ரூ.40லிருந்து ரூ.100 வரை விற்பனை செய்து வருகிறோம், என்றார்.