பழநி முருகன் கோவிலில் கட்டளை கட்டணம் உயர்வு
பழநி: பழநி முருகன் கோவில் கால பூஜை, தற்காலிக கட்டளை கட்டணம், 750ல் இருந்து, 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பழநி முருகன் கோவிலில், காலை, 6:00 முதல் இரவு, 8:00 வரை, ஆறு கால பூஜைகள் நடக்கின்றன. தரிசனம் செய்ய, ஒருவருக்கு, சாதாரண நாட்களில், 150 ரூபாயும்; பங்குனி உத்திரம், தைப்பூசம், மாத கார்த்திகை போன்ற நாட்களில், 300 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கால பூஜைகளுக்காக, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், நிரந்தர கட்டளைதாரர் ஆகலாம். தற்காலிக கட்டளைதாரர் ஆக பங்கேற்க, 750 ரூபாய் கட்டணம். இதில், பூஜையின் போது இருவர் அனுமதிக்கப்படுவர்; பிரசாத பை வழங்கப்படும். விசேஷ நாட்களில், இதற்கு கட்டணம், 1,500 ரூபாய்.இம்மாதம் முதல், தற்காலிக கட்டளை கட்டணம், 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; விசேஷ நாட்களில், 1,800 ரூபாய். கோவில் நிர்வாகம், முன் அறிவிப்பு இன்றி கட்டணத்தை உயர்த்தியதாக புகார் எழுந்துள்ளது. கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்காலிக கட்டளை கட்டணத்தை தான், 150 ரூபாய் உயர்த்தியுள்ளோம். தரிசன கட்டணம் போல, இதற்கு முன் அறிவிப்பு தேவை இல்லை. கால பூஜை தரிசன கட்டணம், 150 ரூபாய் தான்; அதை உயர்த்தவில்லை என்றார்.