ஆய்க்குடி கோயிலில் இன்று கந்தசஷ்டி விழா!
கடையநல்லூர் : ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று (31ம் தேதி) நடக்கிறது. தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவில் சிறப்பு பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலையடுத்து தென்மாவட்ட மக்கள் கந்தசஷ்டி விழாவில் அதிகளவில் கலந்து கொள்ளும் ஊராக ஆய்க்குடி விளங்கி வருகிறது. இப்பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விழா கொடியேற்றம் கடந்த 26ம் தேதி காலை 9 மணிக்கு நடந்தது. தொடர்ந்து கஜ வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு சமய சொற்பொழிவு, வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா மண்டகப்படிதாரர் சிவசுப்பிரமணிய அய்யர் ஏற்பாட்டின்படி நடந்தது.
இரண்டாம் திருவிழா காலை பூங்கோயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா, சமய சொற்பொழிவு, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி திருவீதியுலா மண்டகப்படிதாரர் ஆய்க்குடி வணிக வைசிய சமுதாயம் சார்பில் நடந்தது. மூன்றாம் திருவிழா காலை சிங்க வானகத்தில் சுவாமி திருவீதியுலா, தொடர்ந்து இன்னிசை ராமசங்கீர்த்தனம், இரவு ஆட்டுகிடா வாகனத்தில் சுவாமி வீதியுலா மண்டகப்படிதாரர் ஆய்க்குடி 24மனை சாதுதெலுங்கு செட்டியார் சமுதாயம் சார்பில் நடந்தது.
நான்காம் திருவிழா காலை கணபதி ஹோமம், ருத்ர ஏகாதசி அபிஷேகம், காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, மாலை கர்நாடக இன்னிசை, நாதஸ்வர இன்னிசை, இரவு பஜனை மண்டலி, நாமசங்கீர்த்தனம், குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா மண்டகப்படிதாரர் ஆய்க்குடி கீழக்கிராமம் பிராமணாள் சமுதாயம் சார்பில் நடந்தது.
ஐந்தாம் திருவிழா காலை ருத்ர ஏகாதசி அபிஷேகம், பச்சை சாத்தி வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு நாதஸ்வர கச்சேரி, வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா மண்டகப்படிதாரர் ஆய்க்குடி கம்பர் சமுதாயம் மற்றும் மேலக்கிராமம் பிராமணாள் சமுதாயம் சார்பில் நடந்தது.
ஆறாம் திருவிழாவான இன்று (31ம் தேதி) கந்தசஷ்டியை முன்னிட்டு காலை 8 மணிக்கு ருத்ர ஏகாதசி அபிஷேகம், தொடர்ந்து நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரத்திற்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.
ஏழாம் திருநாளான நாளை (1ம் தேதி) காலை 8 மணிக்கு ருத்ர ஜெபம் அபிஷேகம், காலை 10 மணிக்கு ஆராட்டு வைபவத்திற்கு சுவாமி எழுந்தருளல், இரவு 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 10 மணிக்கு சப்தாவர்ணம், சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. ஆய்க்குடி மேலூர், கீழூர் சேனைத்தலைவர் ஐக்கிய சங்கம் சார்பில் மண்டகப்படி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை சுசீந்திரம் இணை ஆணையர் மற்றும் கோயில் தக்கார் ஞானசேகர், கண்காணிப்பாளர் சோனாச்சலம், உபதொகுதி அலுவலர் ரத்தினவேலு மற்றும் மண்டகப்படிதாரர்கள், முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.