காரைக்குடி கோயில் விழாவில் கெட்டுப்போன பால் வினியோகம்
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் விழாவில் பால் குடம் எடுக்கும் பக்தர்களுக்கு, கெட்டுப்போன பால் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. மார்ச் 7 ல் காப்பு கட்டியதில் இருந்து விழா துவங்கியது. அதில் இருந்து தினமும் சிறியவர் முதல் பெரியோர் வரை பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோயிலை சுற்றி ஏராளமான நடைபாதை கடைகள் முளைத்துள்ளன. அக்கடைகளில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அக்கடைகளில் குளிர்சாதன வசதி இல்லை. இதனால் சிறிது நேரத்தில் பால் கெட்டு விடுகிறது. அவற்றை பக்தர்கள் வேறுவழியின்றி வாங்கிச் செல்கின்றனர். பால் குடம் எடுத்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
பக்தர்கள் கூறியதாவது: காரைக்குடி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் பால்குடம் எடுக்கின்றனர். முத்தாலம்மன் கோயிலை சுற்றி 100 க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் முளைத்துள்ளன. இங்கு வெளியூர்களில் விற்காத கெட்டு போன பாலை வாங்கி வந்து சிலர் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பால்குடம் எடுத்த சிறுவர்கள் சிலருக்கு ஒவ்வாமை, குமட்டல் ஏற்பட்டது. தரமான பாலை விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.