திருவண்ணாமலை கோவிலுக்குள் வெளிநாட்டவர் நுழைய தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், இந்து மதம் சாராத வெளிநாட்டவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு, பல்வேறு ஆஸ்ரமங்கள் இருப்பதால், வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலுக்குள் நேற்று ஒரு அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர். அதில், இந்து மதம் சாராதவர்கள், இந்து மதம் சாராத வெளி நாட்டவர், கிளி கோபுரத்திற்கு உள்ளே வர அனுமதி இல்லை என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த, 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை, அம்மணியம்மன் கோபுரம் வெளியே போலீசார் நிறுத்தி விட்டனர். இதனால், அவர்கள் போலீசாருடன் சிறிது நேரம் வாக்குவாதம் செய்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், தமிழில் பேனர் வைத்துள்ளனர். இது ஆங்கிலம் பேசும் வெளிநாட்டவர்களுக்கு தெரியாது. எனவே, ஆங்கிலத்தில் பேனர் எழுதி வைத்தால், அவர்கள் புரிந்து கொண்டு வாக்குவாதம் செய்யாமல் திரும்பிச் செல்வர் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.