உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் மாசிமக திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரியில் மாசிமக திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரி: வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில், நுாற்றுக்கும்  மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளின. வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று  நடந்தது. தீவனுார் சுயம்பு பொய்யாமொழி  விநாயகர், செஞ்சி அரங்கநாதர், மயிலம்  சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன்,  திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் ஸ்ரீனிவாசப்  பெருமாள்,  தீவனுார் ஆதிநாராயணப் பெருமாள், லாஸ்பேட்டை சுப்ரமணியர், சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில்  உள்ள அங்காள பரமேஸ்வரி, மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள்,  முதலியார்பேட்டை வன்னியபெருமாள், கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சுவாமிகள் மேள தாளத்துடன் ஊர்வலமாக வைத்திக்குப்பம் கடற்கரைக்கு எழுந்தருள செய்யப்பட்டன.

தீர்த்தவாரி முடிந்து, கடற்கரையில் வரிசையாக பக்தர்கள் தரிசனத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாசி மகத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம், மோர்  ஆகியன வழங்கப்பட்டன. மாசி மகத்தையொட்டி, கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்  செய்தனர். திருட்டு சம்பவங்களை தடுக்க, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  50க்கும் மேற்பட்ட   இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், பைனாக்குலர் மூலமும் கண்காணிக்கப்பட்டது. ஒளி பெருக்கி மூலம் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !