உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி மகம் தீர்த்தவாரி: கிள்ளையில் மத நல்லிணக்கம்

மாசி மகம் தீர்த்தவாரி: கிள்ளையில் மத நல்லிணக்கம்

கடலுார்: கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கிள்ளையில் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.  இந்தாண்டு மலை நகரங்களில் நேற்று முன்தினமும், கடல் நகரங்களில் நேற்றும் மாசி மகம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி  கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கடலுார் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள், வண்டிப்பாளையம் சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட சுவாமிகள் பங்கேற்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பக்தர்கள் கடலில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

கிள்ளை: முழுக்குத்துறையில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் சிதம்பரம் நடராஜர், தில்லை கோவிந்தராஜா, வளையமாதேவி வேதராஜ பெரு மாள், பெருமாத்துார் சீனிவாச பெருமாள், பின்னத்துார் பெரு மாள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட  சுவாமிகள் பங்கேற்றன.

ஸ்ரீமுஷ்ணம்: பூவராக சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காலை 10:50 மணிக்கு முழுக்குத்துறை தீர்த்தவாரி உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தைக்கால் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் பரம்பரை டிரஸ்ட்டி சக்காப் வரவேற்பளித்து அங்குள்ள தர்காவில் பாத்தியா ஓதினார்.  ஐந்தாண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரியில் பங்கேற்ற பூவராகசுவாமியை ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். ஏ.எஸ்.பி., நிஷா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எம்.ஜி.ஆர் திட்டு மீனவ இளைஞர்கள் கடலில் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் படகுகளுடன் ஆயத்தபணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதுச்சத்திரம்: பெரியக்குப்பம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் ஆலப்பாக்கம், அம்பலவாணன்பேட்டை, பள்ளிநீரோடை, கீழ்பூவாணிக்குப்பம், மேல்பூவாணிக்குப்பம், தீர்த்தனகிரி, ஆயிக்குப்பம், சங்கொலிக்குப்பம், அகரம், வழுதலம்பட்டு உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த சுவாமிகள் பங்கேற்றன. அதேபோல் அய்யம்பேட்டை கடற்கரை பகுதியில் கள்ளுக்கடைமேடு, தானூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.

பரங்கிப்பேட்டை: சி.புதுப்பேட்டை கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில் பரங்கிப்பேட்டை வரதராஜா பெருமாள், முத்துக்குமரசாமி, குறிஞ்சிப்பாடி பூவராயர், சின்னுார் வெள்ளாரியம்மன், வல்லம் கன்னியம்மன் உட்பட புவனகிரி தாலுக்காவில் இருந்து 100க்கும் மேற்பட்ட சுவாமிகள் பங்கேற்றன. பரங்கிப்பேட்டை வரதராஜா பெருமாளுக்கு கடற்கரையில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கடலில் நீராடி சுவாமிகளை வணங்கினர். இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !