உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கோவில்களில் தகிக்கிறது வெயில் தவிக்கின்றனர் பக்தர்கள்!

காஞ்சிபுரம் கோவில்களில் தகிக்கிறது வெயில் தவிக்கின்றனர் பக்தர்கள்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோவில்களில், வெயில் காலத்தில் பக்தர்கள் நடந்து சென்று, சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.பெரும்பாலான கோவில்களில் காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 7:00 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் வருகிறது. கோடைக்காலம் துவங்கி விட்டதால், பகல், 11:00 மணிக்கு மேல், மாலை, 5:00 மணி வரை, வெயில் கொளுத்துகிறது. இதனால், கோவில் வளாகத்தில், தரையில் நடக்க முடியாமல், ஓட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், நடப்பதற்கு, முதியோர், சிறுவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோவில்களின் பாரம்பரியம் மாறாமல் இருப்பதற்காக, தரையில் கல் பதிக்கப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிமென்ட் தரை உள்ளது.இந்த கோவில்களில் மதியம் பக்தர்கள் நிதானமாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கோடைக்காலங்களில் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்துவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்கள் செல்ல, ரப்பர் விரிப்பு போடப்பட்டுள்ளது; அதிலும் நடக்க முடியவில்லை. ஏகாம்பரநாதர் கோவிலில், கடந்த ஆண்டு நிழல் கூரை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு, அதே வசதி ஏற்படுத்த வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது போல, கைலாசநாதர் கோவிலின் வெளிப்பகுதியில் செங்கல், உள்பகுதியில் கல் தரை உள்ளது.இங்கு பெரும்பாலும் பிற மாநில சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினரும் அதிகம் வருவர். அவர்கள் கோவிலின் அழகை பார்த்து ரசித்து, வெளியே வரும் போது சிரமப்படுகின்றனர். காமாட்சி அம்மன், கச்சபேஸ்வரர் கோவிலிலும் கல் தரை உள்ளதால், பக்தர்கள் வெளிபிரகாரம் சுற்றி வர முடியாமல், தவிக்கும் நிலை உள்ளது.தற்போது நடைபாதை கல்லில், ரசாயன கலவையுடன் கூடிய வண்ணம் பூசினால், அதில் நடக்கும் போது வெப்பம் தெரியாது. அந்த மாதிரி வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !