அவிநாசி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 30ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. கொங்கு நாட்டிலுள்ள, சிவாலயங்களில், சிறப்பு வாய்ந்த, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், தேவாரத்திருப்பதிகம் பெற்ற முதன்மை தலமாகவும், முதலை உண்ட பாலகனை மீட்ட, அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் என பல்வேறு சிறப்பு பெற்றது. மாநிலத்தில், மூன்றாவது பெரிய தேர் உள்ள இக்கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 30ல் துவங்கி, மே, 11ம் தேதி முடிய நடைபெறுகிறது. மே 1ம் தேதி, சூரிய சந்திர மண்டல காட்சிகள்; 2ல், பூத வாகனம், அன்ன வாகனம், அதிகார நந்தி மற்றும் கிளிவாகன காட்சிகள் மற்றும், 3ல் புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சிகள் நடக்கின்றன. விழாவில், முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம், 4ம் தேதி நடக்கிறது. திருவிழாவில், மே 5ல், கற்பக விருட்ஷ வாகனம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி நடக்கிறது. 6ம் தேதி, அதிகாலை பூர நட்சத்திரத்தில், பஞ்சமூர்த்திகளும் தேருக்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். 7ம் தேதி, காலை, 10:00 மணி முதல் பெரிய தேரோட்டம்; 8ம் தேதி, அம்மன் தேரோட்டம் மற்றும் பரிவார மூர்த்திகளின் தேரோட்டம் ஆகியன நடக்கிறது. அன்று இரவு, வண்டித்தாரை, பரிவேட்டை நடக்கிறது. 9ம் தேதி, மாலை தெப்போற்சவம், 10ல், நடராஜர் தரிசனம், 11ம் தேதி, மஞ்சள் நீர், மாலை மயில் வாகன காட்சியும் நடக்கிறது.