விநாயகர் கோவில்களில் சங்கட நிவாரண ஹோமம்
திருவள்ளூர்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், நாளை, சங்கட நிவாரண ஹோமம் நடக்கிறது.ஒவ்வொரு மாதமும், சங்கடஹர சதுர்த்தி அன்று, விநாயகர் கோவில்களில் சங்கட நிவாரண ஹோமம், சிறப்பு பூஜை நடைபெறும். திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எதிரில் அமைந்துள்ள காரிய சித்தி விநாயகர் கோவில். எம்.ஜி.ஆர் நகரில் உள்ள இரட்டை விநாயகர் கோவில், திருவள்ளூர் பஜாரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் வித்யா கணபதி, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வழிவிடும் விநாயகர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், நாளை, 16ம் தேதி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.திருவள்ளூர், ஜெயாநகர் விஸ்தரிப்பில் உள்ள வல்லப கணபதி கோவிலில், நாளை, மாலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமமும், இரவு 7:30 மணிக்கு பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும்.
திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவிலில், 11 விநாயகர்கள் கொண்ட விநாயகர் சபையில், நாளை, மாலை 5:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த, நத்தம் கிராமத்தில் (இ-கணபாக்கம்) ஆனந்தவல்லி சமேத வாலிஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னிதியில், நாளை, காலை 10:00 மணிக்கு, சங்கட நிவாரண ஹோமம் துவங்கி, மதியம் 1:30 மணிக்கு நிறைவடைகிறது. ககார சகஸ்ரநாம அர்ச்சனையும், விசேஷ அபிஷேகம் நடைபெற்று, மதியம், 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.