உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் இன்று (மார்ச் 16) நடக்கிறது.கோயிலில் மார்ச் 4ல் துவங்கிய பங்குனித் திருவிழாவில், நேற்று சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கிரிவீதியில் பச்சை குதிரை ஓட்டம் நடந்தது. பச்சை குதிரைக்கு களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பட்டாபிஷேகம்: இரவு 7:00 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் நடந்தது. பட்டாபிஷேக அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை முடிந்து, சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டது. சுவாமியின் கரத்தில் நவரத்தின செங்கோல், வெள்ளி சேவல் மற்றும் மயில் கொடிகள் சாத்துப்படியானது. தீபாராதனை முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.இன்று(மார்ச் 16) மதியம் 12 முதல் 12:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம், நாளை (மார்ச் 17) தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !