காரைக்குடி முத்துமாரியம்மன் பால்குட விழா
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் பால்குடவிழா நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்தும்,அலகு குத்தி,பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசி - பங்குனி விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். நேற்று முன்தினம் முத்தாலம்மன் கோயிலிலிருந்து, முத்துமாரியம்மன் கோயிலுக்கு கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான பால்குடவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 9:00 மணி வரை மழை பெய்தாலும், அதில் நனைந்தபடியே பக்தர்கள் சென்றனர். ஆயிரக்கணக்கானோர் அலகு குத்தி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:20 மணிக்கு காப்பு பெருக்குதலும், 10:00 மணிக்கு வெள்ளிகவசம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செந்தில்வேலன் தலைமையில் தக்கார் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகு பாண்டி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழா ஏப்ரல் 12-ம் தேதி நிறைவு பெறுகிறது.